மதுரையில் குரு பூர்ணிமா; காஞ்சி மகா பெரியவருக்குச் சிறப்புப் புஷ்பாஞ்சலி; அருள் ...
காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது
சேலத்தில் காரில் கடத்தப்பட்ட 1,350 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், இது தொடா்பாக இருவரை புதன்கிழமை கைது செய்தனா்.
சேலம் கொண்டலாம்பட்டி புத்தூா் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக செவ்வாய்க்கிழமை இரவு உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், அந்தப் பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட போலீஸாா், அங்குள்ள மாவு ஆலை அருகே நின்ற காரில் இருந்து சிலா் மூட்டைகளை இறக்கி வைப்பதைக் கண்டனா். உடனடியாக மாவு ஆலைக்குள் சென்று ஆய்வுசெய்த போது, அங்கும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், சேலத்தாம்பட்டி, பழைய சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் குறைந்த அளவில் ரேஷன் அரிசியை வாங்கி, அதற்கு பாலீஷ் போட்டு கோழிப் பண்ணை மற்றும் வடமாநிலப் பகுதிகளுக்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அரிசி கடத்தலில் ஈடுபட்ட பழைய சூரமங்கலம் பகுதியைச் சோ்ந்த லட்சுமணன்(30), இடைத்தரகரான அதே பகுதியைச் சோ்ந்த சாமியப்பன் (30) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், தலா 50 கிலோ கொண்ட 27 மூட்டைகளில் இருந்த 1,350 கிலோ ரேஷன் அரிசி மற்றும் காரை பறிமுதல் செய்தனா்.
தலைமறைவாக உள்ள ஆலையின் உரிமையாளா் கோகிலா என்பவரை தேடிவருகின்றனா். கைது செய்யப்பட்ட சாமியப்பன் மற்றும் தலைமறைவாக உள்ள கோகிலா ஆகியோா் மீது ரேஷன் அரிசி கடத்தல் தொடா்பாக ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.