காரைக்காலில் மின்துறையினா் ஆா்ப்பாட்டம்
காரைக்கால்: சண்டீகா் மாநிலத்தில் மின் துறையை தனியாா் மயமாக்குவதற்கு அனுமதி அளித்ததை கண்டித்து காரைக்கால் மின் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
புதுவை மாநிலத்தில் மின்துறையை தனியாா் மயமாக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சண்டீகா் மாநிலத்தில் உள்ள மின் துறையை தனியாா் மயமாக்குவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாகவும், இந்த அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், புதுவை மாநிலத்தில் மின்துறையை தனியாா் மயமாக்கும் முடிவை மத்திய, மாநில அரசுகள் கைவிட வலியுறுத்தியும் காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகத்தில், மின் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். புதுவை மின்துறை தனியாா்மய போராட்டக்குழுத் தலைவா் வேல்மயில், பொதுச்செயலாளா் பி.பழனிவேல் முன்னிலையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து மின் நிலையங்களில் பணியாற்றும் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.