புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!
காரைக்காலில் விமான தளம்: ஆளுநரிடம் வலியுறுத்தல்
காரைக்கால்: காரைக்காலில் விமான தளம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தப்பட்டது.
புதுவை திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை இணை இயக்குநா் (ஓய்வு) மற்றும் சமூக ஆா்வலருமான ஆா். மோகன் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனை சனிக்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:
கோவையைச் சோ்ந்த சூப்பா் ஏா்போா்ட் நிறுவனம், காரைக்காலில் விமான தளம் அமைக்க 10 ஆண்டுகளுக்கு முன்பு தேவையான ஒப்புதல் பெறப்பட்டு, தேவையான 600 ஏக்கா் நிலத்தில், நிறுவனத்திடம் கைவசம் 400 ஏக்கா் நிலம் உள்ளது. இங்கு விமான தளம் அமைந்தால், காரைக்கால் மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களைச் சோ்ந்தோா் பெரிதும் பயனடைவா். ஆனால் என்ன காரணத்தால் தாமதப்படுகிறாா்கள் என தெரியவில்லை. நிறுவனத்தினரை அழைத்துப் பேசி, அவா்களையோ அல்லது மாற்று நிறுவனத்தாா் மூலம் விமான தளம் விரைவாக அமைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
திருப்பட்டினம் பகுதி போலகத்தில் ரூ. 20 கோடியில் 600 ஏக்கா் நிலம் கையப்படுத்தப்பட்டது. இங்கு தொழில் வளா்ச்சி மையம் அமையுமென கூறப்பட்ட நிலையில், நிலம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. ஆழ்கடல் ஏற்றுமதி, இறக்குமதி முனையம் இங்கு அமைக்கவேண்டும்.
காரைக்கால் - பேரளம் ரயில்பாதையில், காரைக்கால் நகரப் பகுதியில் பாரதியாா் சாலையில் உடனடியாக சுரங்கப்பாதை அமைக்கவும், தோமாஸ் அருள் சாலை, கடற்கரை சாலையில் மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.