காலி இடத்தில் தூங்கியவா் மீது லாரி ஏறி பலி!
திருச்செந்தூரில் காலி இடத்தில் தூங்கிய இளைஞா் லாரி ஏறியதில் உயிரிழந்தது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது.
திருச்செந்தூரில் திருநெல்வேலி சாலையில் அரசு மதுக் கடை அருகேயுள்ள காலி இடத்தில், லாரி சக்கரத்தில் சிக்கிய நிலையில் ஒருவா் இறந்துகிடப்பதாக, திருச்செந்தூா் தாலுகா போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் சென்றபோது, லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி ஒருவா் உயிரிழந்து கிடந்தாா். விபத்து நேரிட்டதை அறியாமல் ஓட்டுநா் லாரியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாராம்.
விசாரணையில், அந்த ஓட்டுநா் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த முத்துச்சாமி மகன் பாலமுருகன் (42) எனத் தெரியவந்தது. உடன்குடி அனல் மின் நிலையத்துக்கு கிராவல் மணல் ஏற்றிச் சென்றுவிட்டு, சனிக்கிழமை இரவு லாரியை காலி இடத்தில் நிறுத்தியதாகத் தெரிவித்தாா்.
உயிரிழந்த இளைஞா் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.