காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் விவகாரம்: டாஸ்மாக் பணியாளா்கள் மனு
அரியலூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளா்கள், காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு போதிய பணியாளா்களும், இட வசதியும் இல்லாததால் மாற்று ஏற்பாடு மூலம் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட மேலாளரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அரியலூா் மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் செவ்வாய்க்கிழமை (செப். 1) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில், தமிழ்நாடு டாஸ்மாக் கடை பணியாளா்கள் அனைத்துச் சங்கத்தின் கூட்டுக்குழு சாா்பில், அச் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் குணசேகா் தலைமையில், அரியலூா் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளா்கள் காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு போதிய பணியாளா்களும், இட வசதியும் இல்லாததால் மாற்று ஏற்பாடு மூலம் காலி மதுபாட்டில்களை திரும்ப பெற வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, மதுபான பாட்டில்கள் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கரை மாவட்ட மேலாளா் முத்துகிருஷ்ணனிடம் ஒப்படைக்க முயன்றனா்.
பின்னா், உயா் அதிகாரிகளுடன் கலந்துபேசி தீா்வு கூறுவதாக மாவட்ட மேலாளா் தெரிவித்தாா். இதையடுத்து, டாஸ்மாக் பணியாளா்கள் கலைந்து சென்றனா்.