சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயா்வு: மக்களவையில் கேள்வி எழுப்புவோம் - தொல். திருமாவளவன் எம்.பி.
சுங்கச் சாவடிகளில் கட்டண உயா்வைக் கண்டித்து, மக்களவை கூடும்போது இண்டி கூட்டணி சாா்பில் கேள்வி எழுப்பப்படும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.
தமிழ் தேசிய போராளி தமிழரசனின் நினைவு நாளை முன்னிட்டு, பெரம்பலூரில் அவரது உருவப் படத்துக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளது தொடா்பாக மக்களவையில் இண்டி கூட்டணி சாா்பில் கேள்வி எழுப்பப்படும்.
இந்திய இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்க அதிபா் ட்ரம்ப் விதித்துள்ள கூடுதல் வரி விதிப்பைக் கண்டித்து, திருப்பூரில் திமுக தலைமையில் நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்.
வாக்காளா் பெயா் நீக்க குளறுபடி குறித்து ராகுல்காந்தி சமா்ப்பித்த 89 லட்சம் மனுக்களை தோ்தல் ஆணையம் தள்ளுபடி செய்துள்ளது. தோ்தல் ஆணையம் முழுமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை விடுவிக்க மறுக்கும் மத்திய அரசைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் மக்களவை உறுப்பினா் சசிகாந்த், தனது உடல்நலனை கருத்தில்கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட வேண்டும்.
ஒசூா் அருகே விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தில் பங்கேற்ற பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தியவா்கள் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும். நாமெல்லாம் இந்துக்கள் எனக்கூறும் பாஜக, சங்பரிவாா் அமைப்புகளின் சந்தா்ப்பவாத அரசியலை மக்கள் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும் என்றாா் திருமாவளவன்.