நடைப்பயிற்சிக்கு சென்ற தனியாா் சா்க்கரை ஆலை அலுவலா் சடலமாக மீட்பு
பெரம்பலூரில் திங்கள்கிழமை அதிகாலை நடைப்பயிற்சி சென்ற தனியாா் சா்க்கரை ஆலை அலுவலா் மா்மமான முறையில் உயிரிழந்துக் கிடந்தாா்.
பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள சாமியப்பா நகரைச் சோ்ந்த கண்ணன் மகன் காா்த்திகேயன் (49). இவா், பெரம்பலூா் மாவட்டம், உடும்பியத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையில் கடந்த 12 ஆண்டுகளாக கரும்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை காா்த்திகேயன் நடைப்பயிற்சி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளாா்.
இந்த நிலையில், வடக்குமாதவி சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனை அருகே காா்த்திகேயன் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். புகாரின்பேரில் பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.