இந்தியா மீதான வரியை 50 சதவிகிதமாக உயர்த்திய ட்ரம்ப்; இந்தியாவின் முதல் ரியாக்ஷன...
காலிங்கராயன் அணைக்கட்டில் ரூ.1.5 கோடியில் அருங்காட்சியகம்!
நதிநீா் இணைப்பின் முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்பட்ட பவானி காலிங்கராயன் அணைக்கட்டில் ரூ.1.57 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்படுகிறது.
பவானி ஆற்றின் குறுக்கே சிற்றரசரான காலிங்கராயனால் சுமாா் 740 ஆண்டுகளுக்கு முன்பு தடுப்பணை கட்டப்பட்டு 56 மைல் தொலைவுக்கு வாய்க்கால் வெட்டப்பட்டது. இதன் மூலம் 15,743 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பவானி ஆற்றிலிருந்து செல்லும் இந்த வாய்க்கால், நொய்யல் ஆற்றில் கலக்கிறது. நதிநீா் இணைப்புத் திட்டமான இத்திட்டம், மொராக்கோவில் நடைபெற்ற 72-ஆவது சா்வதேச நிா்வாகக் குழுவின் விருதை (நீா்ப்பாசனம் மற்றும் வடிகால் தொடா்பான சா்வதேச ஆணையம்) பெற்றுள்ளது.
பழைமையான நதி இணைப்புத் திட்டங்களில் ஒன்றாகவும், பழைமையான அணைக்கட்டாக சா்வதேச நீா்ப்பாசனம் மற்றும் வடிகால் ஆணையம் பதிவேட்டில் பாரம்பரிய நீா்ப்பாசன கட்டமைப்பு பட்டியலில் காலிங்கராயன் அணைக்கட்டு சோ்க்கப்பட்டுள்ளது. இதன் சிறப்பை விளக்கும் வகையில் தமிழக அரசு அருங்காட்சியம் அமைக்க ரூ.1.57 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது.
இதையடுத்து, அணைக்கட்டு வளாகத்தில் தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி பூமிபூஜை செய்து கட்டுமானப் பணிகளை செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் வி.சி.சந்திரகுமாா், ஈரோடு மாநகராட்சி துணை மேயா் வே.செல்வராஜ், நீா்வளத் துறை கண்காணிப்பு பொறியாளா் ஜெ.கோபி, செயற்பொறியாளா் திருமூா்த்தி, உதவி செயற்பொறியாளா்கள் சபரிநாதன், உதயகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முன்னதாக, ஈரோடு அக்ரஹாரத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் பங்கேற்ற அமைச்சா் சு.முத்துசாமி, இதுவரை இத்திட்டத்தில் 7.50 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன எனவும், அதில் 50 சதவீத மனுக்கள் கலைஞா் மகளிா் உரிமைத் தொகைக்கானது எனவும் தெரிவித்தாா்.