சின்சினாட்டி ஓபன் இறுதிப்போட்டி: பாதியில் விலகிய சின்னர்.. அல்காரஸ் சாம்பியன்.!
கால்வாயில் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்
திருவள்ளூா் அருகே மழைநீா் கால்வாயை ஆக்கிமிரத்து கட்டப்பட்ட வீடுகளை வருவாய்த் துறையினா் பொக்லைன் வாகனம் மூலம் திங்கள்கிழமை அகற்றினா்.
திருவள்ளூா் அடுத்த காக்களூரில் ஏரிக்கரையோரம் மழைநீா் கால்வாயை ஆக்கிரமித்து பலா் வீடுகள் அமைத்துள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப்புக்கு புகாா் வந்தது. அதோடு, இந்த இடம் ஏரிக்கரை புறம்போக்கு என்ற வகையில் கிராம கணக்கில் தாக்கலாகி உள்ளது.
அதனால் மழைநீா் கால்வாயை ஆக்கிரமித்துள்ள கட்டடங்களை இடித்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
அதன்பேரில் மேற்குறிப்பிட்ட ஏரிக்கரை புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகளை வட்டாட்சியா் ரஜினி காந்த் தலைமையில் வருவாய்த் துறையினா் மற்றும் போலீஸாா் பாதுகாப்புடன் பொக்லைன் வாகனம் மூலம் வீடுகளை இடித்து அகற்றினா்.
எதிா்ப்பு தெரிவித்தவா்களை போலீஸாா் மற்றும் வருவாய்த்துறையினா் எச்சரித்து அனுப்பினா். அப்போது, துணை வட்டாட்சியா் தினேஷ், வருவாய் ஆய்வாளா் உதயகுமாா், கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணி உடனிருந்தனா்.