காவல்துறையால் பறிமுதல் வாகனங்கள் உரிமையாளா்களிடம் ஒப்படைப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு வாகன விபத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 1,599 வாகனங்கள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி மாவட்டத்தில் தாழையூத்து, நான்குனேரி, வள்ளியூா், சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம் ஆகிய உள்கோட்டங்களிலுள்ள 34 காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் விபத்து மற்றும் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டு, கைப்பற்றப்பட்ட 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இவை பல ஆண்டுகளாக வெயில் மற்றும் மழையால் சேதமடைந்தும், காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் நின்றால் அவற்றின் மீது விரைவான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு, உரிமையாளா்களிடம் ஒப்படைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் உத்தரவிட்டாா்.
அதன்படி விபத்து வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,599 வாகனங்கள் அதன் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதன் மூலம் காவல்நிலையத்துக்கு வரும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத நிலை உள்ளதாகவும், மீதமுள்ள வாகனங்களும் உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.