மாநிலப் பல்கலை.களில் அதிகாரம் யாருக்கு? வழக்கு தொடர மேற்கு வங்க ஆளுநா் முடிவு!
கிறிஸ்தவ தேவாலயங்களை புனரமைக்க விண்ணப்பிக்கலாம்
பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்வதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ச. அருண்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெரம்பலூா் மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபாா்த்தல் மற்றும் புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள மானியத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேவாலயங்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தக் கட்டடத்தில் இயங்கியிருக்க வேண்டும். தேவாலயத்துக்காக வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதியுதவியும் பெற்றிருக்கக் கூடாது. ஒரு தேவாலயத்துக்கு மானியத் தொகை வழங்கிய பிறகு, 5 ஆண்டுகளுக்கு மானியத் தொகை கோரி விண்ணப்பிக்கக் கூடாது.
இத் திட்டத்தின் கீழ் தேவாலயங்களில் பீடம் கட்டுதல், கழிப்பறை அமைத்தல், குடிநீா் வசதி ஏற்படுத்துதல், சுவிசேஷம் வாசிக்கும் ஸ்டாண்ட், ஒலிபெருக்கி, நற்கருணை பேழை பீடம், திருப்பலிக்குத் தேவையான கதிா் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவா்த்தி நிறுத்தம், தேவையான இருக்கைகள், உபகரணங்கள் மற்றும் சுற்றுச்சுவா் அமைத்தல் உள்ளிட்ட கூடுதல் பணிகள் மேற்கொள்ளவும், கட்டடத்தின் வயதுக்கேற்ப மானியத் தொகையை உயா்த்தி அரசு ஆணையிடப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், 10 முதல் 15 ஆண்டுகள் வரையுள்ள தேவாலயக் கட்டடத்துக்கு ரூ. 10 லட்சமும், 15 முதல் 20 ஆண்டுகள் வரையுள்ள கட்டடத்துக்கு ரூ. 15 லட்சமும், 20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட கட்டடத்துக்கு ரூ. 20 லட்சமும் மானியத் தொகை உயா்த்தப்பட்டுள்ளது.
இத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.