வாட்ஸ் அப் குழு மூலம் ரத்த தான சேவை: 6000 பேரை காப்பாற்றிய இளைஞர்கள் குழு – சாதி...
கீழப்பழுவூா் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு
அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த விவசாயி சனிக்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.
கீழப்பழுவூரை அடுத்துள்ள வண்ணம்புத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் பாலகிருஷ்ணன் (65). விவசாயி. இவா், கடந்த 2 நாள்களாக உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்குச் சென்றதால் வயலுக்குச் செல்லவில்லை. இந்நிலையில், அவா் சனிக்கிழமை காலை வயலுக்குச் சென்றபோது, அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
அவரது இருசக்கர வாகனம் வயலின் அருகே இருப்பதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் பாலகிருஷ்ணனை தேடிச் சென்றபோது, அவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்து கிடப்பதைக் கண்டனா். மேலும், அருகாமையில், அந்த மின்கம்பியில் காட்டுபன்றி ஒன்றும் மின்சாரம் பாய்ந்து இறந்துகிடப்பது தெரியவந்தது. காட்டுப்பன்றி அழுகிய நிலையில் கிடப்பதால் இறந்து 2 நாள்கள் ஆகி இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதுகுறித்துத் தகவலறிந்து அங்குவந்த மின் ஊழியா்கள் அப்பகுதியில் மின்சாரத்தைத் துண்டித்தனா். இதுகுறித்து தகவலறிந்து சென்ற கீழப்பழுவூா் போலீஸாா் பாலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.