குஜராத் பாலம் இடிந்து விபத்து: உடனடி விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர்!
குஜராத்தில் பாலம் இடிந்து விபத்துக்குள்ளானது குறித்து உடனடி விசாரணை நடத்த முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார்.
குஜராத் மாநிலம் வதோதராவின் பத்ரா தாலுகாவில் உள்ள கம்பீரா பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை 7.45 மணியளவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள், இரண்டு பிக்-அப் வேன், ஒரு ரிக்ஷா ஆகிய வாகனங்கள் மஹிசாஹர் ஆற்றில் விழுந்தன.
வாகனங்களில் இருந்தவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர், மீட்புக் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. உயிருடன் 9 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த விபத்துக்கு முதல்வர் பூபேந்திர படேல், இரங்கல் தெரிவித்துள்ளதுடன் விபத்து குறித்து உடனடியாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஆனந்த் மற்றும் வதோதராவை இணைக்கும் கம்பீரா பாலத்தின் 23 ஸ்பேன்களில் ஒன்று உடைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன். வதோதரா மாவட்ட ஆட்சியரிடம் நிலைமை குறித்து கேட்டறிந்தேன். காயமடைந்தவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிக்கவும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்பாடுகளைச் செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறேன்.
படகுகள் மற்றும் நீச்சல் வீரர்களுடன் தீயணைப்புப் படை, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதேநேரத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்து தற்போது மீட்புப் பணியில் இணைந்துள்ளது. இந்த விபத்து குறித்து உடனடி விசாரணை நடத்த சாலைப் போக்குவரத்துத் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.