குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்த வாகனங்கள்: மூவர் பலி!
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் முக்கிய பாலம் இடிந்து விழுந்ததில் பல வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தது. இதுவரை மூவர் பலியான நிலையில், பலர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
மத்திய குஜராத் மற்றும் செளராஷ்டிராவை இணைக்கும் முக்கிய பாலமாக வதோதராவின் பத்ரா தாலுகாவில் உள்ள கம்பீரா பாலம் இருக்கிறது.
இந்த நிலையில், இன்று காலை 7.45 மணியளவில் பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அப்போது பாலத்தில் சென்றுகொண்டிருந்த இரண்டு லாரிகள், ஒரு பிக்-அப் வேன் மற்றும் சில வாகனங்கள் மஹிசாஹர் ஆற்றில் விழுந்தது.
அந்த வாகனங்களில் இருந்தவர்களை மீட்கும் பணியில் காவல்துறையினர், மீட்புக் குழுவினர் மற்றும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை 3 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், 4 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் வதோதரா புறநகர் காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தப் பாலம் நீண்ட காலமாக ஆபத்தான நிலையில் இருந்ததாகவும், புதிய பாலம் அமைக்க வேண்டுகோள் விடுத்தும் அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்று உள்ளூர்வாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஆனந்த், வதோதரா, பருச் மற்றும் அங்கலேஷ்வர் ஆகிய மாவட்டங்களை செளராஷ்டிராவுடன் இணைக்கும் முக்கிய பாலம் இடிந்து விழுந்துள்ள நிலையில், போக்குவரத்தும் வர்த்தகமும் முடங்கியுள்ளது.