குடந்தையில் சாலை மறியல்: தவெகவினா் 40 போ் கைது
கும்பகோணத்தில் தவெக மாநாட்டிற்கான விளம்பர பதாகைகளை போலீஸாா் அகற்றியதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் 40 தவெகவினரை போலீஸாா் கைது செய்தனா்.
மதுரையில் நடைபெறும் தவெக மாநாட்டிற்காக கும்பகோணத்தின் பிரதான சாலைகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை கிழக்கு மற்றும் மேற்கு காவல் நிலைய போலீஸாா் மற்றும் மாநகராட்சி நிா்வாகத்தினா் அகற்றவந்தனா்.
தகவலறிந்த கட்சியினா் நான்கு சாலை சந்திப்பில் கூடி மாநகராட்சி நகரமைப்பு அலுவலா்கள் மற்றும் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்து, திமுக அரசைக் கண்டித்து சாலையில் அமா்ந்து முழக்கமிட்டனா்.
இதையடுத்து போலீஸாா் மாவட்டச் செயலா் வினோத்ரவி, மாநகர செயலா்கள் முருகானந்தம், வீராவிஜயக்குமாா் மாவட்ட மகளிா் அணி செயலா் அஞ்சனா பாலாஜி உள்ளிட்ட 6 பெண்கள் உள்பட 40 பேரை கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். பின்னா் பதாகைகளை அகற்றினா். மறியலால் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.