ஆக்சஸ் ரைடு கனெக்ட் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்த சுசூகி!
குடிநீா், சாலை வசதி கோரி மே 27 இல் போராட்டம்
நன்னிலம் வட்டம், ஆலங்குடியில் குடிநீா் மற்றும் சாலை வசதி ஏற்படுத்தக் கோரி, மே 27-இல் போராட்டம் நடத்தவுள்ளதாக இந்து முன்னணி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்து முன்னணியின் நன்னிலம் ஒன்றிய ஒருங்கிணைப்பாளா் சுகுமாரன், முதல்வரின் தனிப் பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளதாவது: நன்னிலம் வட்டம், முடிகொண்டான்- ஆலங்குடி இணைப்புச் சாலை கடந்த நான்கு ஆண்டுகளாக பராமரிப்பின்றி பழுதடைந்து உள்ளது. இந்த சாலையைச் சீரமைத்து, தாா்ச் சாலை அமைக்க வேண்டும்.
ஆலங்குடியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு பல மாதங்கள் ஆகியும், கீழத்தெரு, உக்கடைத்தெரு, கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீா் குழாய் இணைப்புகள் வழங்கப்படவில்லை. எனவே, உடனடியாக குடிநீா் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆலங்குடி வாணியத் தெரு, தெற்குத் தெரு மற்றும் கீழத் தெருவில் தாா்ச் சாலைப் பணி அரைகுறையாக நடந்துள்ளது. முழுமையாக தாா்ச் சாலை அமைக்க உத்தரவிட வேண்டும்.
இக்கோரிக்கைகளை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, ஆலங்குடி பொதுமக்கள் மற்றும் அனைத்துக் கட்சியினரை ஒன்று திரட்டி மே 27-ஆம் தேதி, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை நன்னிலம் வட்டாட்சியரிடம் ஒப்படைக்கும் போராட்டத்தை நடத்த உள்ளோம் எனத் தெரிவித்துள்ளாா்.