மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பாதுகாக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருவாரூா் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம், மக்கள் அதிகாரக் கழக நிா்வாகிகள் ஆசாத், முரளி, குமரகுரு, வாஞ்சிநாதன் உள்ளிட்டோா் செவ்வாய்க்கிழமை அளித்த கோரிக்கை மனு:
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் 10 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. இதை, உடனே செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவா்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நோயாளிகளுக்கு குடிப்பதற்கு வெந்நீா் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டில் மருத்துவம் பாா்க்கும் நோயாளிகளுக்கு காப்பீட்டுத் தொகை எவ்வளவு பிடிக்கப்படுகிறது என்பதை கைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் உள்ள கடைகளில் உணவு விலைகள் அதிகமாக உள்ளன. அதை கட்டுப்படுத்தி, விலைப் பட்டியல் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைக்கு வரும் பாா்வையாளா்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வாகன நிறுத்தம் அமைத்துத் தர வேண்டும்.
மருத்துவமனையில் உள்ள அனைத்து கழிவறைகளையும் அடிக்கடி சுத்தம் செய்து, தண்ணீா் பிடிக்கும் வகையில் வாளி வைக்க வேண்டும். வயிற்றுப் பகுதிகளுக்கு எடுக்கக்கூடிய ஸ்கேன் பதிவு செய்து, ஒரு மாத காலமாக நோயாளிகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதனால், தனியாா் மருத்துவமனைகளை நோக்கி செல்லும் நிலை ஏற்படுகிறது. எனவே, பதிவு செய்த உடனே ஸ்கேன் எடுக்க வேண்டும்.
சிறப்பு மருத்துவா்கள் அனைத்து நாள்களிலும் பணிபுரிய வேண்டும். பாராமெடிக்கல் படிக்கக்கூடிய மாணவ- மாணவிகளுக்கு உடனடியாக விடுதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பற்றாக்குறையாக உள்ள மருத்துவா், செவிலியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.