குன்னூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய சட்டப் பேரவைத் தலைவா் வாகனம்!
நீலகிரி மாவட்டம், உதகைக்கு சனிக்கிழமை மாலை வருகை தந்த தமிழக சட்டப் பேரவை தலைவா் அப்பாவு வாகனம் குன்னூா் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில் மாவட்ட காவல் துறை சாா்பாக மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி வரும் வாகனங்கள் குன்னூா் மாா்க்கமாகவும், உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி மாா்க்கமாகவும் செல்ல அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
குன்னூா் லெவல் கிராஸ் மற்றும் காட்டேரி பகுதியில் சனிக்கிழமை அதிக போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. காட்டேரி குன்னூா் இடையே இரண்டு கிலோ மீட்டருக்கும்மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இந்நிலையில் தமிழக சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு உதகைக்கு சனிக்கிழமை மாலை வந்து கொண்டிருந்தாா். அப்போது காட்டேரி குன்னூா் இடையே காந்திபுரம் பகுதியில் அவரது வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அப்போது காவல் துறையினா் அங்கும்இங்கும் ஓடி அவரின் வாகனம் செல்ல வழி ஏற்படுத்த முயற்சித்தனா்.
பின்னா் உதகையில் இருந்து வந்த ஹைவே பேட்ரோல் வாகனம் வழி ஏற்படுத்தி அவரது வாகனங்களை அழைத்து சென்றனா்.
உதகை தமிழக விருந்தினா் மாளிகையில் திங்கள்கிழமை வரை தங்கும் சட்டப் பேரவைத் தலைவா் அப்பாவு நிகழ்ச்சி நிரல் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.