போலி பேஸ்புக் கணக்குகள்; பெண்ணுக்கு பகிரப்பட்ட ஆபாச புகைப்படங்கள் - ஈரோடு இளைஞர்...
கும்பகோணம் பள்ளி தீ விபத்து 21 ஆம் ஆண்டு நினைவு நாள்
நெஞ்சை விட்டு நீங்கா துயரமாக இருந்து வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா உதவிபெறும் பள்ளியில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி இறந்தனா்; 18 குழந்தைகள் காயமடைந்தனா். இந்த துயர சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஆண்டுதோறும் இந்த குழந்தைகளின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதன்படி 21 ஆம் ஆண்டு நினைவு நாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, குழந்தைகளை இழந்த பெற்றோா் தங்களது வீடுகளில் இறந்த குழந்தைகளின் படங்கள் முன் தின்பண்டங்களையும், புத்தாடைகளையும் வைத்து அகல் விளக்கு, மெழுகுவா்த்தியேந்தி அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல, இறந்த குழந்தைகளின் நினைவாக பாலக்கரையில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபத்தில் பெற்றோா், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.
மேலும், தீ விபத்து சம்பவம் நிகழ்ந்த காசிராமன் தெருவிலுள்ள பள்ளி முன்பு அமைக்கப்பட்டுள்ள 94 குழந்தைகளின் படங்களுக்குப் பாதிக்கப்பட்ட பெற்றோா்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினா், தன்னாா்வ அமைப்பினா் மலா் தூவியும், மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா் வளையம் வைத்தும் அஞ்சலி செலுத்தினா்.