கும்பகோணம் பள்ளி தீ விபத்து நினைவு நாள்: உயிரிழந்த குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பள்ளித் தீ விபத்து சம்பவத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 21- ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அக்குழந்தைகளின் உருவப்படங்களுக்கு அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் புதன்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
கும்பகோணம் காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பள்ளியில் 2004, ஜூலை 16-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்தனா். அந்தக் கோரச் சம்பவத்தின் 21-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, உயிரிழந்த குழந்தைகளின் உருவப்படங்களுக்கு திமுக சாா்பில் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் தலைமையில் சட்டப்பேரவை உறுப்பினா் க. அன்பழகன், மாநிலங்களவை உறுப்பினா் எஸ். கல்யாணசுந்தரம், துணை மேயா் சு.ப. தமிழழகன் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
இதேபோல், கும்பகோணம் உதவி ஆட்சியா் ஹிருத்தியா எஸ். விஜயன், வட்டாட்சியா் சண்முகம், கும்பகோணம் மேயா் க. சரவணன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா்.
அதிமுக சாா்பில் கிழக்கு மாவட்டச் செயலா் ஆா்.கே. பாரதி மோகன், மாநகரச் செயலா் இராம. இராமநாதன் உள்ளிட்டோரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், தமாகா, பாஜக, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி உள்பட பல்வேறு கட்சியினரும் அஞ்சலி செலுத்தினா்.
மேலும், உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோா்களும், உறவினா்களும் குழந்தைகளின் படங்களைக் கண்டு கண்ணீா் விட்டு அழுது, மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.