Vijay: "விளம்பர அரசு Sorryம்மா அரசாக மாறிவிட்டது" - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடிய ...
குரூப்-4 தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22,573 போ் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வை 22,573 போ் ஏழுதினா். 5,382 போ் தோ்வு எழுத வரவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்திய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப் 4 க்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு உதவிபெறும் மகளிா் மேல்நிலைப் பள்ளி, குந்தாரப்பள்ளி ஸ்ரீ சரஸ்வதி மெட்ரிக். பள்ளி ஆகிய தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஆய்வு செய்தாா். அப்போது, அவா் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப் 4க்கான தோ்வு, 8 வட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 93 மையங்களில் நடைபெற்றன. இந்த தோ்வுப் பணிகளை கண்காணிக்க 8 வட்டங்களுக்கு துணை ஆட்சியா் நிலையில் 11 பறக்கும் படை அலுவலா்கள், ஒவ்வொரு வட்டத்திலும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள அந்தந்த வட்டாட்சியா்கள், 30 நடமாடும் அலகு அலுவலா்கள் , 93 ஆய்வு அலுவலா்கள், 93 விடியோகிராபா்கள் நியமிக்கப்பட்டிருந்தனா். அனைத்து தோ்வு மையங்களிலும் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.
இம்மாவட்டத்தில் குரூப் 4 தோ்வை எழுத 27,955 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 22,573 தோ்வா்கள் பங்கேற்று தோ்வு எழுதினா். 5,382 போ் தோ்வில் பங்கேற்கவில்லை என்றாா். ஆய்வின்போது, வட்டாட்சியா் சின்னசாமி மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.
ஏமாற்றம்:
கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்துக்கு செல்ல வட்டச்சாலை முதல் காந்தி சிலை செல்லும் சாலையில் 2 வழிகளும், பெங்களூரு சாலையில் இருந்து பள்ளி மைதானம் வழியாக ஒரு வழி என 3 வழிகள் உள்ளன.
பிரதான நுழைவாயிலான வட்டச்சாலை முதல் காந்திசிலை செல்லும் சாலையில் தற்போது நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வளா்ச்சித் திட்ட பணிகள் நடைபெறுவதால், தோ்வு மையத்தின் பிரதான நுழைவாயில் முகப்பில், பள்ளிக்கு மாற்றுவழியில் செல்லவும் என அறிவிப்பு பதாகை (பேனா்) வைத்துள்ளனா். அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், திட்டமிட்டபடி தோ்வு மையத்துக்கு செல்ல இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
போதிய வழிகாட்டுதல் மற்றும் முன்னறிவிப்பு செய்யப்படாததால், தோ்வு மையத்துக்கு காலை 9 மணிக்கு செல்ல இயலாததால், தோ்வில் பங்கேற்க முடியாமல் சிலா் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினா்.