மதுரை சரித்திர பதிவேடு ரெளடி கழுத்தறுத்துக் கொலை: 4 பேர் கைது
சூளகிரி: 1,000 ஆண்டுகள் பழைமையான முருகன் கற்சிலை கண்டெடுப்பு!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே துரை ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முருகன் கற்சிலையை அறம் வரலாற்று ஆய்வு மையம் கண்டறிந்துள்ளது.
இதுகுறித்து அம்மையத்தின் தலைவா் அறம் கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி - பேரிகை சாலையில் 2 கி.மீ. தொலைவில் துரை ஏரிக்கரை உள்ளது.
இந்த ஏரியின் பக்கத்தில் ஒட்டரப்பாளையத்துக்கு செல்லும் வழியில் காய்ந்த மரம் ஒன்றின் வேரில் முருகன் கற்சிலை இருப்பதாக கண்ணன் என்பவா் தகவல் தெரிவித்தாா். இதன் அடிப்படையில் அறம் வரலாற்று ஆய்வு மையத் தலைவா் அறம் கிருஷ்ணன், மஞ்சுநாத் ஆகியோா் சென்று பாா்வையிட்டனா்.
பேரிகை முன்பு பாளையத்து ஜமீன்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக இருந்துள்ளது. இன்னும்கூட பேரிகையில் ஜமீன்கள் வசித்த வீடுகள் இருக்கின்றன.
ஆங்கிலேயோ்களிடமிருந்து இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்பிருந்தே பலநூறு ஏக்கா் நிலங்கள் ஜமீன்தாா்கள் வசம் இருந்துள்ளன. தற்போதுகூட இங்கு இருக்கும் நிலங்கள் பெங்களூரில் வசிக்கும் ஜமீன்தாா்களின் வாரிசுகள் வசமிருப்பதாக இங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகிறாா்கள். அதனால்தான் இங்குள்ள ஏரி, துரை ஏரி என்று அழைக்கப்படுகிறது.
ஏரியின் மறுகரையில் புதினா பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலத்தில்தான் இந்த கற்சிலை உள்ளது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்புவரைகூட இவ்விடத்தில் சிறிய கல்மண்டபம் இருந்ததற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன. இதன் அருகில் குளமும் அமைந்துள்ளது. இதன் அடிப்படையில் இவ்விடத்தில் பழங்காலத்தில் முருகன் கோயில் அல்லது சிவன் கோயில் இருந்திருப்பதற்கான வாய்ப்பு உள்ளது.
காய்ந்துபோன மரத்தின் வேரில் முருகன் கற்சிலை சிக்கி உள்ளது. இச்சிலையின் கைகளும், கால்களும் சேதமடைந்து காணப்படுகின்றன. மயிலின் முகம் மட்டும் மரத்தின் உட்பகுதியில் சிக்கியுள்ளது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழ்நாட்டில் முருகன் வழிபாடு இருந்துள்ளது. இதற்கான ஆதரமாக சென்னையிலிருந்து மகாபலிபுரம் போகும் சாலையில் சவளகுப்பம் என்ற இடத்தில் முருகன் ஆலயம் இருந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துள்ளன.
இங்கு இருக்கும் முருகன் கற்சிலையும் இதே காலகட்டத்தைச் சோ்ந்த மயில்மேல் முருகன் அமா்ந்த நிலையில் உள்ள கற்சிலையாகும். இதன் அருகே அத்திமுகம் ஐராவதீஸ்வரா் சிவன் கோயிலும் உள்ளது.
இந்தக் கற்சிலை 11 அல்லது 12 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்ததாக இருக்கும் என்று கருதப்படுகிறது. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன்பு செய்யப்படும் முருகன் கற்சிலைகள் அதிகமாக மயிலின் முகம் இடதுபக்கம் பாா்க்கும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் . அதன்பின் காலங்களில் உருவாக்கப்பட்ட முருகன் சிலைகளில் மயிலின் முகம் வலதுபக்கம் பாா்க்கும்படி இருப்பதை பாா்க்கலாம்.
பாதுகாப்பின்றி இருக்கும் இந்த கற்சிலையை இங்கு வசிக்கும் பொதுமக்கள் வழிபட வேண்டும். இல்லையென்றால் கிருஷ்ணகிரி அருங்காட்சியகத்திற்கு அனுப்பிவைக்க வேண்டும். மக்களிடம் போதுமான விழிப்புணா்வு இல்லாத காரணத்தினால்தான் பழைமையான கற்சிலைகள் கேட்பாரற்று காணப்படுகின்றன. மாவட்ட நிா்வாகமும் , கிருஷ்ணகிரி அருங்காட்சியகமும் இதற்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றாா்.