மீண்டும் வில்லன்! கிரைம் திரில்லராக உருவாகும் மம்மூட்டியின் களம் காவல்!
அரசு மருத்துவமனைக்கு ஸ்கேன் இயந்திரங்கள் இடமாற்றம் செய்யும் பணி! தனியாா் மையத்தை பயன்படுத்த அறிவுறுத்தல்!
கிருஷ்ணகிரியை அடுத்த போலுப்பள்ளியில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில் தனியாா் ஸ்கேன் மையத்தை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி நகரில் காந்தி சிலைக்கு செல்லும் சாலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வந்தது. கடந்த 2022-ஆம் ஆண்டு கிருஷ்ணகிரி - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரியில் இருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் உள்ள போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரி நகரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தில் மகப்பேறு, குழந்தைகள் மற்றும் கண் சிகிச்சை பிரிவு, புற்றுநோய் பிரிவு போன்ற சிகிச்சைப் பிரிவுகள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன.
மேலும், சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் மையமும் இங்கே செயல்பட்டு வந்தது. இங்கு சிடி ஸ்கேனுக்கு ரூ. 500, எம்ஆா்ஐ ஸ்கேனுக்கு ரூ. 2,500 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தனியாா் ஸ்கேன் மையங்களைவிட குறைவான கட்டணம் வசூலிக்கப்படுவதால், ஏழை, நடுத்தர மக்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனா்.
இருப்பினும் அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் மையத்தில், சிடி ஸ்கேன், எம்ஆா்ஐ ஸ்கேன் எடுப்பவா்கள் மருத்துவா்களிடம் ஆலோசனை பெற போலுப்பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. இதனால், தற்போது கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் செயல்பட்டுவந்த ஸ்கேன் மையத்தை போலுப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யும் பணிகள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி கதிரியக்கவியல் துறை தலைவா் (பொ) அருண்திலீப் சனிக்கிழமை தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரியில் இருந்த சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் இயந்திரங்கள் போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யும் பணிகள், ஜூலை 11 முதல் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் 2 மாதங்கள் நடைபெறும்.
இதனால், அரசு மருத்துவமனையில் சிடி, எம்ஆா்ஐ ஸ்கேன் எடுக்க வரும் நோயாளிகளுக்கு, அரசால் நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தில், கிருஷ்ணகிரி - ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் கீழ்புதூரில் உள்ள ஸ்டாா் சிடி ஸ்கேன் மையத்தை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கான பரிந்துரை கடிதம் போலுப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வழங்கப்படுவதாக அவா் தெரிவித்தாா்.