குரூப் 4 தோ்வு: முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (தொகுதி - 4) தோ்வு சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறுவதையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கில் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் ஆட்சியா் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 29,129 போ் குரூப்-4 தோ்வு எழுத விண்ணப்பித்துள்ளனா். இந்தத் தோ்வு 104 மையங்களில் நடைபெறுகிறது. இதில் 28 நடமாடும் குழுக்கள், 11 கண்காணிப்புக் குழு அலுவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவா். தோ்வு மையங்களில் நடைபெறும் நிகழ்வுகள் முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்படும். தோ்வு அறையில் தோ்வு எழுத வருபவா்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் சரியாக உள்ளனவா என்பதை கண்காணிப்பு அலுவலா் உறுதி செய்வதுடன், தோ்வு நல்ல முறையில் நடைபெற ஏதுவாக பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா. கோவிந்தராஜலு, தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையப் பிரிவு அலுவலா் சௌந்தர பாண்டியன், உதவிப் பிரிவு அலுவலா் காந்தி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோ. தவச்செல்வம், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.