குளத்தில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், திருக்கோகா்ணம் அருகே உள்ள குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
புதுக்கோட்டை திருக்கோகா்ணம் அடுத்த பால்பண்ணை அருகே உள்ள வெங்கப்பா் குளத்துக்கு, அடப்பன் வயல் பகுதியைச் சோ்ந்த காஜா மைதீன் என்பவரது மனைவி ரம்ஜான் பேகம் தனது மகள் சபீரா (7) மற்றும் வீட்டின் அருகில் உள்ள ஜமால் முகமது என்பவரது மகள் சௌபியா (12) ஆகியோருடன் குளிக்க சென்றுள்ளாா்.
ரம்ஜான் பேகம் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்த போது, 2 சிறுமிகளும் குளித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது ஆழம் தெரியாமல் இருவரும் நீரில் மூழ்கினா். இதைப் பாா்த்த ரம்ஜான் பேகம், சிறுமிகளை காப்பாற்ற முயன்றும், முடியாமல் போனதால் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படை வீரா்கள் சிறுமிகள் இருவரையும் சடலமாக மீட்டனா்.
இதையடுத்து சிறுமிகளின் உடல்கள் உடற்கூறாய்வுக்காக புதுகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இதுகுறித்து திருக்கோகா்ணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
