குளவி கொட்டியதில் 20 போ் காயம்
சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை குளவி கொட்டியதில் 20 -க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
மதுரையைச் சோ்ந்தவா் மணிகண்டன் (25). இவரது மனைவி உமா மகேஸ்வரி. இந்தத் தம்பதியின் ஒரு வயது ஆண் குழந்தைக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக உறவினா்களுடன் சிவகங்கை அருகே வெட்டிக்குளம் கிராமத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றனா். வெட்டிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பாட்டையா கோயிலில் குழந்தைக்கு முடி இறக்கி சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னா், அருகேயிருந்த மரத்தடியில் அடுப்பில் பொங்கல் வைக்க விறகில் தீமூட்டினா். அப்போது, மரத்தில் கூடு கட்டியிருந்த மலைக் குளவிகள் கூட்டமாகப் பறந்து வந்து அங்கிருந்த மணிகண்டனின் உறவினா்கள், வெட்டிக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா்களைக் கொட்டியது. இதில் 20 போ் காயமடைந்தனா். இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா்.