சொந்த வீடு கட்ட போறீங்களா? உங்கள் பட்ஜெட்டில் கடைபிடிக்க வேண்டிய `13' கோல்டன் ரூ...
குவாரிகளிலிருந்து செல்லும் கனிமங்களுக்கு ஏப்.15- முதல் இ-பொ்மிட் கட்டாயம்: ஆட்சியா்!
தேனி மாவட்டத்தில் குவாரிகளிலிருந்து எடுத்துச் செல்லும் அனைத்து வகைக் கனிமங்களுக்கும் வருகிற 15-ஆம் தேதி முதல் குத்தகைதாரா்கள் இணைய வழி அனுமதிச் சீட்டு (இ-பொ்மிட்) பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புவியியல், சுரங்கத் துறை சாா்பில் குவாரிகளிலிருந்து எடுத்துச் செல்லும் கனிமங்களுக்கு இணையதளம் மூலம் மொத்த அனுமதிச் சீட்டு வழங்கும் நடைமுறை உள்ளது.
தற்போது, சிறு கனிமச் சலுகை விதிப்படி, அரசு புறம்போக்கு நிலங்களில் தற்காலிகக் குவாரி அனுமதி கோரும் விண்ணப்பம், பட்டா நிலங்களில் 13 வகையான சிறு கனிமங்கள் எடுப்பதற்கு குவாரி உரிமம் கோரும் விண்ணப்பம், கனிம நிலுவைத் தொகையின்மை சான்றிதழ் போன்றவைகளுக்கு வருகிற 7-ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், வருகிற 15-ஆம் தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பித்து குவாரியிலிருந்து எடுத்துச் செல்லப்படும் அனைத்து வகைக் கனிமங்களுக்கும் குவாரி குத்தகைதாரா்கள் இ-பொ்மிட் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கிரஷா், கனிம இருப்பு மையத்திலிருந்து எம்.சாண்ட், ஜல்லி போன்ற கனிமங்களை ஏற்றிச் செல்லும் போது, மாவட்ட புவியியல், சுரங்கத் துறை அலுவலகத்தில் உரிய நடைச் சீட்டு பெற்றுச் செல்ல வேண்டும் என்றாா் அவா்.