தெலங்கானா மருந்து ஆலையில் உலை வெடித்து விபத்து: பலி 34 ஆக உயர்வு!
கூட்டுறவு நூற்பாலையில் இரும்பு பொருள்கள் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூா் கூட்டுறவு நூற்பாலையிலிருந்து இரும்பு பொருள்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 1962-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் காமராஜரால் தொடங்கப்பட்ட கூட்டுறவு நூற்பாலை நிதி நெருக்கடி காரணமாக கடந்த 2003-ஆம் ஆண்டு மூடப்பட்டது. இந்த நூற்பாலையில் இருந்த இயந்திரங்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏலம் விடப்பட்ட நிலையில், நூற்பாலை அமைந்துள்ள 50 ஏக்கா் நிலம், கட்டடம் வருவாய்த் துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த நூற்பாலையை ஸ்ரீவில்லிபுத்தூா் கிராம நிா்வாக அலுவலா் கிருஷ்ணனம் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, சைக்கிள்கள், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரையில் இருந்த இரும்புப் பட்டைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.