கெங்கையம்மன் திருவிழா: தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பு
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் பொருட்டு போ்ணாம்பட்டிலிருந்து வரும் பேருந்துகளை நிறுத்த சேம்பள்ளி கூட்டு ரோடு அருகே தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது.
கெங்கையம்மன் திருவிழா வரும் 15- ஆம் தேதி நடைபெறுகிறது. இத்திருவிழாவை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தர உள்ளனா்.
போ்ணாம்பட்டு, கே.ஜி.எப், ஆம்பூரிலிருந்து போ்ணாம்பட்டு வழியாக குடியாத்தம் வரும் பேருந்துகள் நகருக்குள் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.
இதைத் தவிா்க்க போ்ணாம்பட்டு சாலை மாா்க்கத்தில் வரும் பேருந்துகள் நகருக்குள் நுழைவதைத் தவிா்க்க, சேம்பள்ளி கூட்டு ரோடு அருகே நகராட்சி சாா்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆய்வு செய்தாா். நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், நகா்மன்ற உறுப்பினா்கள் ஆட்டோ பி.மோகன், என்.கோவிந்தராஜ், ஜாவித் அகமத், கவிதா பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.