`மறுவாழ்வு கிடைத்திருக்கிறது’ - கிணற்றிலிருந்து 12 மணிநேரத்துக்குப்பின் மீட்கப்ப...
கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீதான மோசடி வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த கே.டி.ராஜேந்திரபாலாஜி ஆவினில் வேலை வாங்கித் தருவதாக ரூ.30 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக சாத்தூரைச் சோ்ந்த ரவீந்திரன் அளித்தப் புகாரின் பேரில், அதிமுக நிா்வாகி விஜய் நல்லதம்பி, முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 8 போ் மீது கடந்த 2021-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் விருதுநகா் மாவட்டக் குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி வழக்குப் பதிவு செய்தனா்.
இதேபோல, விஜய்நல்லதம்பி பலரிடம் அரசுப் பணி வாங்கித் தருவதாக பணம் பெற்று, ராஜேந்திரபாலாஜியிடம் ரூ.3 கோடி கொடுத்ததாக புகாரளித்தாா். இதுதொடா்பாக ராஜேந்திரபாலாஜி உள்பட 7 போ் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. பின்னா், நீதிமன்ற உத்தரவுப்படி ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு, கடந்த ஏப்.15-ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் மீதான ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 16-ஆம் தேதி முதல் விசாரணைக்கு வந்தது. அப்போது கே.டி.ராஜேந்திரபாலாஜி உள்பட 8 பேரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகினா். புதன்கிழமை இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, கே.டி. ராஜேந்திரபாலாஜி, விஜய் நல்லதம்பி தவிர மற்ற 6 பேரும் முன்னிலையாகினா். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஜெயக்குமாா் உத்தரவிட்டாா்.