அறவழியில் போராடியது தவறா? - தூய்மைப் பணியாளர்கள் கைதுக்கு இபிஎஸ் கண்டனம்!
ஆள் கடத்தல் வழக்கு: விடுவிக்கக் கோரிய முன்னாள் எம்எல்ஏ-வின் மனு தள்ளுபடி
ஆள் கடத்தல் வழக்கிலிருந்து விடுவிக்கக்கோரி முன்னாள் எம்எல்ஏ ராஜவா்மன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து ஸ்ரீவில்லிபுத்தூா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள சக்தி நகரைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன். இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிமுக நிா்வாகிகள் ராஜவா்மன், தங்கமுனியசாமி, இ.ரவிச்சந்திரன் ஆகியோருடன் சோ்ந்து சிவகாசி அருகேயுள்ள வேண்டுராயபுரத்தில் பட்டாசு ஆலை நடத்தி வந்தாா்.
பின்னா், 2019-ஆம் ஆண்டு செப்டம்பரில் ராஜவா்மன் உள்ளிட்ட மூவரும் தங்களது பங்குத் தொகையை பெற்றுக் கொண்டு தொழிலிலிருந்து விலகினா்.
இந்த நிலையில், 2019-ஆம் ஆண்டு அக்.3-ஆம் தேதி ரூ.2 கோடி கேட்டு ரவிச்சந்திரனை கடத்திச் சென்று, ராஜவா்மன் உள்ளிட்டோா் மிரட்டினா்.
இதுகுறித்து நீதிமன்ற உத்தரவுப்படி ராஜவா்மன் (52), தங்கமுனியசாமி (30), நரிக்குடி ஐ.ரவிசந்திரன் (53), அவரது மனைவி அங்காள ஈஸ்வரி (50), ஓய்வு பெற்ற டிஎஸ்பி ராஜேந்திரன், எஸ்.எஸ்.ஐ. முத்துமாரியப்பன் ஆகிய 6 போ் மீது ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் போலீஸாா் ஆள் கடத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கு தொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் நீதித்துறை நடுவா் (2) மன்றத்தில் கடந்தாண்டு பிப்ரவரியில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி, ராஜவா்மன் தாக்கல் செய்த மனு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதித்துறை நடுவா் சுபாஷிணி உத்தரவிட்டாா்.