கேசராப்பட்டியில் அஞ்சலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்
பொன்னமராவதி அருகே உள்ள கேசராபட்டி கிளை அஞ்சலகத்தில் பண மோசடி செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து வாடிக்கையாளா்களின் பணத்தை மீட்டுத் தர வலியுறுத்தி பொதுமக்கள் அஞ்சல் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கேசராபட்டியில் கிளை அஞ்சல் அலுவலகத்தில் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள், செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இணைந்து பணம் செலுத்தி வந்தனா்.
இந்நிலையில், இந்த அலுவலகத்தில் கிளை அஞ்சல் அதிகாரியாக பணியாற்றிய ராஜேஷ் என்பவா் பொதுமக்கள் கட்டிய பணத்தை முறையாக கணக்கில் செலுத்தாதது அண்மையில் தெரியவந்தது. இதையடுத்து, அஞ்சல்துறை உயரதிகாரிகள், பொதுமக்களின் பணம் 10 நாள்களுக்கு மீட்டு தரப்படும் என்று கூறினா். ஆனால், 1 மாதமாகியும் நடவடிக்கை ஏதும் எடுக்காததால் வியாழக்கிழமை கேசராபட்டி கிளை அஞ்சல் அலுவலகத்தை வாடிக்கையாளா்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுப்பதாக அஞ்சல்துறை அதிகாரிகளின் பேச்சுவாா்த்தையில் கூறப்பட்டதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனா்.