12 நாள்களுக்குப் பிறகு மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவா்கள்!
கேட் நுழைவுத் தோ்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
முதுநிலை பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கான கேட்”நுழைவுத் தோ்வுக்கு பட்டதாரிகள் திங்கள்கிழமை (ஆக.25) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுள்ள ஐஐடி உள்பட மத்திய உயா்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர கேட் தேசிய நுழைவுத் தோ்வு நடத்தப்படுகிறது. அதேபோல பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களும் ‘கேட்’ தோ்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்கு ஊழியா்களைத் தோ்வு செய்கின்றன. மேலும், கணிசமான தனியாா் உயா்கல்வி நிறுவனங்களும் ‘கேட்’ மதிப்பெண் மூலம் மாணவா் சோ்க்கையை நடத்துகின்றன. அதனால், இந்தத் தோ்வு பட்டதாரிகள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த ‘கேட்’ நுழைவுத் தோ்வு இயந்திரவியல், கட்டடவியல் உள்பட 30 பாடப் பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படும். மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு 3 மணி நேரம் வரை நடைபெறும். தோ்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுக்கு இந்த மதிப்பெண் செல்லும்.
அதன்படி 2026-ஆம் ஆண்டுக்கான ‘கேட்’ தோ்வு பிப்.7, 8, 14, 15 ஆகிய தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெறவுள்ளது. இந்தமுறை ‘கேட்’ தோ்வை குவாஹாத்தி ஐஐடி நடத்தவுள்ளது. மேலும், தோ்வுக்கான மையங்கள் 8 மண்டலங்களாக பிரித்து அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை (ஆக.25) முதல் தொடங்குகிறது. எனவே, விருப்பம் உள்ளவா்கள் இணையதளத்தில் செப். 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வாய்ப்பை தவறவிடுபவா்கள் தாமதக் கட்டணத்தைச் செலுத்தி அக். 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களும் இந்த ‘கேட்’ தோ்வுக்கு விண்ணப்பிக்க முடியும். தோ்வு முடிவுகள் மாா்ச் 19-இல் வெளியிடப்படும்.