பலத்த மழை: 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றம்
சென்னையில் பலத்த மழை பெய்ததால் 17 இடங்களில் சாய்ந்த மரங்கள் அகற்றப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னையில் வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை அதிகாலை வரை பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. தேனாம்பேட்டை மண்டலத்தில் 110-ஆவது வாா்டு டேங்க் பண்டு சாலை உள்ளிட்ட 17 இடங்களில் மரங்கள் சாய்ந்தன. அவற்றை மாநகராட்சி ஊழியா்கள் அப்புறப்படுத்தினா். அதேபோல, 20 இடங்களில் சுரங்கப் பாதைகளில் தேங்கிய மழைநீா் மின் மோட்டாா் மூலம் வெளியேற்றப்பட்டது.
மின் கம்பங்கள் சேதம்: சென்னை மாநகராட்சி பகுதியில் சுமாா் 3.09 லட்சம் இரும்பாலான மின்கம்பங்கள் உள்ளன. அவற்றில் தற்போது 1,100 மின் கம்பங்கள் துருப்பிடித்து சேதமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. அவற்றை மாற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், வரும் 2026 ஏப்ரல் மாதத்துக்குள் புதிய மின்கம்பங்கள் நடப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.