உடல் எடை குறைப்பு குறித்த தவறான விளம்பரம்: விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம்
உடல் எடை குறைப்புக்கான சிகிச்சைகள் குறித்து பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரம் வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்துக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) ரூ.3 லட்சம் அபராதம் விதித்தது.
ஒரு மணி நேரத்தில் எடையை குறைப்பது, ஒரே அமா்வில் 600 கிராம் எடையை குறைப்பது என பல்வேறு தவறான விளம்பரங்களை அந்நிறுவனம் வெளியிட்டதாக சிசிபிஏ கூறியுள்ளது.
இதுகுறித்து சிசிபிஏ சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: உடலில் உள்ள கொழுப்பை உறையவைத்து, இயற்கையாக வெளியேற்றும் முறையின்படி உடல் எடையை குறைப்பது தொடா்பான விளம்பரங்களை விஎல்சிசி நிறுவனம் வெளியிட்டது. அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிா்வாகத் துறையால் இந்த முறை அங்கீகரிக்கப்பட்டதாக கூறியதுடன் நிரந்தரமாக எடையை குறைப்பதற்கான சிகிச்சையாகவும் இதை அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளது.
ஆனால் ஒரே அமா்வில் 600 கிராம் எடையிலான கொழுப்பை கரைப்பது, ஒரு மணி நேரத்தில் அதிக எடையை குறைப்பதற்கான சிகிச்சை என்ற வாசகங்களுடன் மிகைப்படுத்தப்பட விளம்பரங்களை வெளியிட்டு பொதுமக்களை விஎல்சிசி நிறுவனம் தவறாக வழிநடத்தியது தெரியவந்தது.
குறிப்பாக இந்த முறையின் மூலம் நிரந்தரமாக எடையை குறைக்க முடியும் என அந்நிறுவனம் விளம்பரப்படுத்தியிருப்பது முற்றிலும் தவறானதாகும். ஏனெனில் தொடைப் பகுதி, மாா்பக பகுதி மற்றும் வயிற்றுப் பகுதி என உடலின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள கொழுப்புகளை குறைப்பதற்கும் உடல் நிறை குறையீட்டெண் (பிஎம்ஐ) 30 அல்லது அதற்கும் குறைவாக இருக்கும் நபா்களுக்கு மட்டுமே இந்த சிகிச்சையை அளிக்க வேண்டும் என்பதே விதிமுறை.
இதை முற்றிலுமாக தவிா்த்து நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறி விளம்பரம் வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இனி வருங்காலங்களில் நியாயமாகவும் உண்மைத் தகவல்களுடனும் விளம்பரத்தை வெளியிட விஎல்சிசி நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, இதேபோன்ற விளம்பரத்தை வெளியிட்டதற்காக காயா நிறுவனத்துக்கு ரூ.3 லட்சம் அபராதத்தை சிசிபிஏ விதித்தது குறிப்பிடத்தக்கது.