கேளிக்கை வரி மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல்!
கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
கட்டணத்துடன் நடத்தப்படும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பேரவை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், கேளிக்கை வரி விதிக்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஆர். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
உள்ளாட்சி அமைப்புகளுக்குஅதிகாரம்
கல்வி நிறுவனம், சங்கம், குழுமம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் நுழைவுச் சீட்டு அல்லது பங்களிப்பு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் (அனுமதி கட்டணத்தில்) கேளிக்கை வரி வசூலிக்கலாம் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தால் அனுமதி கட்டணம் வசூலித்து நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் கேளிக்கை வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் அதிகாரம் அளிக்க சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை.
எனவே, அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதிக் கட்டணம் ஒவ்வொன்றின் மீதும் 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தகுந்த வழிமுறைகளைச் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு வழிவகை செய்ய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது.