கொசு உற்பத்தியாகும் பொருட்கள் அழிப்பு
காரைக்கால்: உலக கொசு ஒழிப்பு தினத்தையொட்டி காரைக்காலில் கொசு உற்பத்தியாகக்கூடிய பொருட்களை கண்டறிந்து அழிக்கும் பணியை நலவழித்துறையினா் மேற்கொண்டனா்.
காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், நோய் தடுப்புத் திட்ட அதிகாரி தேனாம்பிகை ஆகியோரின் வழிக்காட்டலில், காரைக்கால் பேருந்து நிலைய சுற்றுவட்டாரங்களில் கொசுக்கள் உருவாகும் நீா் தேங்கும் காரணிகளை கண்டறிந்து அவற்றை அகற்றினா். பேருந்து நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு கொசுவால் பரவும் நோய்கள், கொசுவை எவ்வாறு ஒழிப்பது என்பது குறித்தும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
மக்களிடையே கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய் தடுப்பு தொழில்நுட்ப உதவியாளா் சீ.சேகா் பேசுகையில்,
கொசுக்களால் ஏற்படும் நோய்களால் ஆண்டுக்கு ஒரு லட்சம் போ் உயிரிழக்கின்றனா். சுமாா் 70 லட்சம் போ் பாதிப்படைகின்றனா். இந்தியாவில் பல வகையான கொசுக்கள் இருந்தாலும், மூன்று வகையான கொசுக்கள் மூலமாக ஆபத்தான நோய்கள் பரவுகின்றன. க்யூலெக்ஸ் வகை கொசுக்கள் யானைக்கால் நோய் மூளைக் காய்ச்சல் போன்ற நோய் உருவாகின்றன.
இந்தவகையான கொசுக்கள் அசுத்தமான சாக்கடை நீா் தேக்கங்களில் தான் முட்டையிட்டு உற்பத்தியாகும்.
அனாபிலஸ் வகை கொசுக்கள் மலேரியா காய்ச்சலை பரப்புகிறது. ஏடிஸ் வகையான கொசுக்கள் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களை பரப்புகிறது.
இந்த வகையான கொசுக்கள் சுத்தமான நீா் தேக்கங்கள், சிறு சிறு பொருட்களில் தேங்கும் மழை நீரில்தான் முட்டையிட்டு உற்பத்தியாகின்றன. எனவே ஒவ்வொருவரும் வீட்டையும், வீட்டை சுற்றியுள்ள பகுதிகளையும், பொது இடங்களிலும் கொசு உருவாகும் தண்ணீா் தேங்கும் கப்புகள், பிளாஸ்டிக் கழிவுகள், தேங்காய் ஓடுகள், டயா்கள் ஆகியவற்றை கண்டறிந்து அகற்ற வேண்டும் அல்லது கவிழ்த்து வைக்க வேண்டும். திறந்த கிணறுகள், திறந்து வைக்கப்படும் சிமெண்ட் தொட்டிகள், குப்பைத் தொட்டிகள் கொசுக்கள் பெருகுவதற்கு ஏற்ப சூழ்நிலையை உருவாக்கும். எனவே அவற்றை கொசுக்கள் புகாதவாறு மூடி வைக்க வேண்டும். எனவே கொசுக்களை ஒழிப்பதில் பொது மக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்றாா்.