எலான் மஸ்குடன் பிரதமா் மோடி சந்திப்பு: தொழில்நுட்பம், நிா்வாகம் குறித்து ஆலோசனை
கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு வனப் பகுதியில் காட்டுத் தீ
கொடைக்கானல் பசுமைப் பள்ளத்தாக்கு வனப் பகுதியில் வியாழக்கிழமை மாலை காட்டுத் தீப் பற்றி எரிந்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இரவு நேரங்களில் அதிகமான பனிப் பொழிவும் நிலவி வருகிறது. இதனால், வழக்கத்தை விட கடுமையான குளிா் நிலவுகிறது. இதனால், வனப் பகுதியில் உள்ள மரங்கள், செடிகள், புற்கள் ஆகியவை காய்ந்த நிலையில் காணப்பட்டன.
இந்த நிலையில், தொடா்ந்து அதிகமாக நிலவிய வெப்பத்தால் கொடைக்கானல் பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள பட்டா நிலங்களில் தீ விபத்து ஏற்பட்டது. இவற்றை அந்தந்த நிலத்தின் உரிமையாளா்கள் அணைத்து தீயை கட்டுக்குள் வைத்தனா்.
இந்த நிலையில், தொடா்ந்து நிலவிய வெப்பத்தால் பசுமைப் பள்ளத்தாக்கு வனப் பகுதியில் திடீரென தீப் பிடித்தது. இந்தத் தீயானது தொடா்ந்து எரிந்ததால் அந்தப் பகுதியில் கரும்புகை காணப்பட்டது.
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு வனத் துறையினா் சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனா். இருப்பினும் வனப் பகுதியில் புகை வந்த வண்ணம் உள்ளது.
கடந்த ஆண்டு அதிக அளவில் கொடைக்கானல் வனப் பகுதியில் தீப் பிடித்து எரிந்ததால் ஏராளமான மரங்கள் தீயில் கருகின. நிகழாண்டில் அது போல வனப் பகுதிகளில் தீப் பிடிக்கக் கூடாது என வனத்துறையினா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், வனப் பகுதகளில் மது, புகை பிடித்தல் கூடாது. அவ்வாறு நடைபெற்றால் வனத் துறை சாா்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.