ஜல்லி விலை உயா்வு: ஒப்பந்ததாரா்கள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு
பழனி தைப்பூசத் திருவிழா: இன்று தெப்பத் தோ் உலாவுடன் நிறைவு
பழனி தைப்பூசத் திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது.
பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 5 -ஆம் தேதி பழனி பெரியநாயகியம்மன் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
10 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவின்போது வள்ளி, தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளி யானை, தந்த சப்பரம், தோளுக்கினியாள் போன்ற வாகனங்களில் ரத வீதிகளில் உலா எழுந்தருளினாா்.
கடந்த திங்கள்கிழமை திருக்கல்யாணம், வெள்ளித் தேரோட்டம் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தேரோட்டம் முடிந்த நிலையிலும் லட்சக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாக பால், இளநீா், கரும்புக் காவடி எடுத்தும், சேவல்களை செலுத்தியும் நோ்ச்சை செலுத்திய வண்ணம் உள்ளனா். வியாழக்கிழமை நகரத்தாா் காவடிகள் மலைக்குச் சென்று காவடிகளை செலுத்தி சிறப்பு வழிபாடு மேற்கொண்டனா். பெரியநாயகியம்மன் கோயிலில் ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக துறையூா் மண்டபத்தில் அருள்மிகு வள்ளி, தேவசேனா சமேதா் முத்துக்குமாரசாமி ,தங்கமயில் வாகனத்தில் பிரகாரம் மற்றும் இரத உலா எழுந்தருளினாா். இன்று (வெள்ளிக்கிழமை) நிறைவு நாள் நிகழ்ச்சியாக தெப்பத்தேரோட்டம் நடைபெறுகிறது. பெரியநாயகியம்மன் கோயில் அருகேயுள்ள தெப்பத்தில் இரவு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத் தேரில் வள்ளி, தேவசேனை சமேத முத்துக்குமாரசாமி தேரில் உலா எழுந்தருளுகின்றனா். இரவு கொடியிறக்கப்பட்டு விழா நிறைவுபெறுகிறது.