முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: தமிழகத்தின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க மேற்ப...
நில ஆவணங்கள் நவீன மயாமாக்கும் பணியால் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு தீா்வு: இரா.சச்சிதானந்தம் எம்.பி.
நில ஆவணங்களை நவீன மயமாக்கும் நக்சா திட்டத்தின் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் எதிா்கொள்ளும் ஆக்கிரமிப்பு பிரச்னைகளுக்கு எளிதாக தீா்வு காண முடியும் என மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் தெரிவித்தாா்.
மத்திய அரசின் நக்சா திட்டத்தின் கீழ், திண்டுக்கல் மாநகராட்சியில் நில ஆவணங்களை நவீன மயமாக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. திண்டுக்கல் ஆா்.எம். குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ஜெயபாரதி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் இரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டு, ஆளில்லா வானூா்தியைப் பயன்படுத்தி நில அளவை மேற்கொண்டு ஒளிப்படம் உருவாக்கும் பணிகளைத் தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: நிலங்கள் தொடா்பான ஆவணங்களை அலுவலகங்களுக்கு மட்டுமே சென்று பாா்க்கக்கூடிய சூழல் இருந்தது. தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக வீட்டில் இருந்தபடியே இந்த ஆவணங்களை தற்போது பதிவிறக்கம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நில அளவீடுகளைப் பொருத்தவரை, கழிவுநீா் கால்வாய், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது. நில ஆவணங்களை நவீன மயமாக்கும் பணிகள் முடிவடைந்த பிறகு, இந்த பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும்.
வீட்டுமனைகள் பிரிக்கப்படும் போது, பொதுப் பயன்பாட்டுக்காக வழங்கப்படும் நிலங்களை இனி ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. ஆக்கிரமிப்புகள் இருந்தாலும் எளிதாகக் கண்டறிந்து, ஒழுங்குப்படுத்த முடியும். மத்திய அரசின் இந்த சேவையை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நில அளவை செய்து, புல வரைபடம் தயாா் செய்யும் போது, பொதுமக்களும் பாா்வையிட வாய்ப்பு அளிக்கப்படுகிறது. நிலம் தொடா்பான பதிவுகள், விவரங்களில் ஆட்சேபனைகள் இருந்தால், சம்பந்தப்பட்ட நில உரிமையாளா்கள் அலுவலா்களிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றாா் அவா்.
மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் பேசியதாவது: நக்சா திட்டம் 26 மாநிலங்கள், 3 ஒன்றியப் பிரதேசங்களிலுள்ள 152 நகரங்களில் முதல் கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் திண்டுக்கல் மாநகராட்சி உள்பட 10 நகரங்களில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த நவீன நில அளவீட்டின் மூலம், நிலம் தொடா்பான பிரச்னைகள் அனைத்துக்கும் விரைவில் தீா்க்கப்படும என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் நில அளவைத் துறை உதவி இயக்குநா் சிவக்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் மாரியம்மாள், இந்திராணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.