பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
அரசு அலுவலா்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்: ஆட்சியா் எச்சரிக்கை
ரெட்டியாா்சத்திரம் அருகே ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா், முறையாக பணி செய்யாத அரசு அலுவலா்கள் தங்களது அணுகுமுறையை 2 மாதங்களுக்குள் மாற்றிக் கொள்ள வேண்டும் என எச்சரித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசின் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கே.புதுக்கோட்டை ஊராட்சிப் பகுதிக்குச் சென்ற அவா், அங்கு கனவு இல்லத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் பணிகளை பாா்வையிட்டாா். அப்போது, தொகுப்பு வீடு திட்டத்தின் கீழ், வீடு கட்டிய பயனாளி ஒருவா், தனக்கு முழுமையான நிவாரணத் தொகை கிடைக்கவில்லை எனப் புகாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகப் பொறியாளா்கள் ராமநாதன், மகேந்திரன், பணி மேற்பாா்வையாளா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்களிடம் ஆட்சியா் கேள்வி எழுப்பினாா்.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் பகுதியில் பணியாற்றியும்கூட, நீங்கள் முறையாக வேலை பாா்க்கவில்லை. 2 மாதங்கள் காலம் அவகாசம் வழங்கப்படும். உங்களுடைய அணுகுமுறைகளை மாற்ற வேண்டும். இல்லாதபட்சத்தில், கொடைக்கானல், குஜிலியம்பாறை போன்ற பகுதிகளுக்கு பணிமாறுதல் பெற்று சென்றுவிடுங்கள். அந்தப் பகுதிகளுக்கு அடிக்கடி ஆய்வுக்கு வர முடியாது.
அரசு தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து, வீடுகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அமைச்சா் தொகுதியில் இருந்து கொண்டு, பயனாளிகளை தோ்வு செய்வதிலும், திட்டத்தை விரைந்து செயல்படுத்துவதற்கும் அலுவலா்கள் முன்வர வேண்டும் என்றாா்.
இந்த ஆய்வின்போது மகளிா் திட்ட அலுவலா் சதீஷ்பாபு, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மாரியப்பன், மலரவன் ஆகியோா் உடனிருந்தனா்.