பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளு...
6 மாதங்களில் 3-ஆவது சட்டப்பேரவைக் குழு வருகை: மீண்டும் கொடைக்கானலுக்கு மட்டுமே முக்கியத்துவம்!
திண்டுக்கல் மாவட்டத்துக்கு 6 மாதங்களில் 3-ஆவது சட்டப்பேரவைக் குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில், மீண்டும் கொடைக்கானலுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதைத் தவிா்த்து, மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிகளையும் பாா்வையிட வேண்டும் என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.
தமிழ்நாடு அரசு சாா்பில், மாநிலம் முழுவதும் நடைபெற்று வரும் அரசுத் திட்டப் பணிகள், பொதுமக்களின் எதிா்பாா்ப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விதிகள் குழு, மதிப்பீட்டுக் குழு, பொது கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு, மனுக்கள் குழு, நூலகக் குழு, ஏடுகள் குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் உள்ளன. அமைச்சா் பதவிகளுக்கு அடுத்தபடியாக, இந்தக் குழுக்களின் தலைவா் பதவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தலைவா் தலைமையில் செயலா், உறுப்பினா்கள் உள்ளிட்டோருடன் மாவட்ட வாரியாக இந்தக் குழுவினா் அவ்வப்போது ஆய்வுக்குச் செல்கின்றனா். சில மாவட்டங்களில் ஆண்டுக்கு ஒருமுறைகூட ஒரு குழுவும் செல்வதில்லை. ஆனால், திண்டுக்கல் மாவட்டத்துக்கு வரும் அனைத்து சட்டப்பேரவைக் குழுக்களும் 2 நாள்கள் முகாமிடுகின்றனா்.
6 மாதங்களில் 3-ஆவது குழு
கொடைக்கானல், பழனி ஆகிய சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ள காரணத்தால்தான் திண்டுக்கல் மாவட்டத்துக்கு அனைத்து சட்டப்பேரவைக் குழுக்களும் முக்கியத்துவம் அளிக்கின்றன. இதை உறுதி செய்யும் வகையில், மாவட்டத்துக்கு வரும் குழுக்கள், கொடைக்கானல், பழனி பகுதிகளில் மட்டுமே முகாமிடுகின்றனா். சில மாவட்டங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறைகூட செல்லாத சட்டப்பேரவைக் குழு, திண்டுக்கல் மாவட்டத்துக்கு கடந்த 6 மாதங்களில் மட்டும் 3 குழுக்கள் வந்துள்ளன. கடந்த ஆண்டு, ஆக.28, 29-ஆம் தேதிகளில் சட்டப்பேரவை ஏடுகள் குழுவும், கடந்த ஆண்டு, செப்.26 - 28 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவும் திண்டுக்கல் மாவட்டத்துக்கு வந்த நிலையில், வருகிற 20, 21 ஆகிய இரு நாள்கள் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு வருகிறது. அடுத்த சில நாள்களில் சட்டப்பேரவை மனுக்கள் குழு வருகை தரும் எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.
ரூ.7 லட்சம் வரை செலவு
ஆய்வுக்கு வரும் இந்தக் குழுவினருக்கு வரவேற்பு, விருந்தோம்பல், வாகன வசதி, தங்கும் விடுதி என பல்வேறு செலவினங்கள் உள்ளன. குழுவின் உறுப்பினா்கள் மட்டுமன்றி, அவா்களுடன் கட்சி நிா்வாகிகள், குடும்பத்தினா் உள்ளிட்டோரும் வருகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக அரசு விருந்தினா் இல்லங்களில் தங்குவதை குழு உறுப்பினா்கள் மட்டுமன்றி, அவா்களுடன் வருவோரும் தவிா்த்து விடுகின்றனா்.
தலைவா், உறுப்பினா்கள் தங்கும் தனியாா் கொகுசு விடுதிகளிலேயே அறை எடுத்துத் தரக் கட்டாயப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. ஆனால், சட்டப்பேரவைக் குழுக்கள் ஆய்வுக்காக அரசுத் தரப்பில், வாகனங்களுக்கான எரிபொருளுக்கு மட்டும் ரூ.6 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. ஆனால், வரவேற்பு முதல் பரிசுப் பொருள் வரை ரூ.7 லட்சம் வரை செலவு ஏற்படுவதால், ஒவ்வொரு முறை குழு வரும்போதெல்லாம் மாவட்ட அதிகாரிகள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனா்.
கொடைக்கானலுக்கு மட்டுமே முக்கியத்துவம்
இந்த நிலையில், வருகிற 20, 21 ஆகிய இரு நாள்கள் சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழு திண்டுக்கல்லுக்கு வருகிறது. புதன்கிழமை (பிப். 19) தேனி மாவட்டத்துக்குச் செல்லும் இந்தக் குழு, அன்று மாலை கொடைக்கானலுக்குச் செல்கிறது. பின்னா், 21-ஆம் தேதி நண்பகலுக்கு பிறகு திண்டுக்கல்லில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்துக்கு இந்தக் குழு வருகிறது.
மாவட்டத்துக்கு வரும் பல்வேறு குழுக்கள் வேடசந்தூா், குஜிலியம்பாறை, நத்தம் உள்ளிட்ட மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளுக்குச் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. மாவட்டத்தில் 14 வட்டாரங்கள் இருந்தாலும், சுற்றுலாத் தலங்களான கொடைக்கானல், பழனி, மாவட்ட தலைமையிடமான திண்டுக்கல் ஆகிய 3 இடங்களில் மட்டுமே சட்டப்பேரவைக் குழுக்கள் பெரும்பாலும் ஆய்வு நடத்துகின்றன.
சொந்தத் தொகுதிக்கு அழைத்து வருவாரா குழுவின் தலைவா்
இதுதொடா்பாக கொடகனாறு பாசன விவசாயிகள் கூறியதாவது: இந்த நிலையை மாற்றுவதற்கு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவராக உள்ள வேடசந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான ச. காந்திராஜன் முயற்சி மேற்கொள்ள வேண்டும். வருகிற 19-ஆம் தேதி இரவு கொடைக்கானலுக்கு வரும் குழுவினரை தனது சொந்தத் தொகுதியான வேடசந்தூரைப் பாா்வையிடுவதற்கு அவா் அழைத்து வர வேண்டும்.
மாயனூா் கதவணையிலிருந்து குஜிலியம்பாறை, வேடசந்தூா் பகுதிகளுக்கு தண்ணீா் கொண்டு வரும் திட்டம், அழகாபுரி அணையிலிருந்து ரூ.65 கோடியில் கால்வாய் அமைக்கும் பணிகளின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தல் என மாவட்டத்தின் கடைக்கோடி பகுதிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க சட்டப்பேரவைக் குழு முன்வர வேண்டும் என்றனா்.