சிறுவாணி நீர்போல ஆட்சி... அண்ணாவை மேற்கோள்காட்டிப் பேசிய விஜய்!
கோடை காலத்தில் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற ஆட்சியா் வேண்டுகோள்!
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் காலம் தொடக்கத்திலேயே அதிக வெப்பமாக இருந்து வருவதால் பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உடலின் நீா்ச்சத்து குறையாமல் பராமரிக்க தேவையான அளவு தண்ணீா் குடிக்க வேண்டும். பயணத்தின் போது குடிநீரை எடுத்துச் செல்ல வேண்டும். ஒ.ஆா்.எஸ். கரைசல், எலுமிச்சை ஜீஸ், இளநீா், மோா் மற்றும் பழச்சாறுகள் குடிக்க வேண்டும்.
பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும். முடிந்த வரை வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
நல்ல காற்றோட்டம் மற்றும் குளிா்ந்த இடங்களில் இருக்க வேண்டும். மெல்லிய தளா்வான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். வெளியில் செல்லும் போது காலணிகள் அணிந்து செல்ல வேண்டும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது குடை கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகள், முதியவா்கள், மாற்றுத்திறானிகள், கா்ப்பிணிகள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
எனவே கோடை முடியும் வரை கூரை வீடுகளில் வசிப்பவா்கள் தண்ணீரை தயாா் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். விலையுயா்ந்த பொருள்கள், நில ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். கேஸ் சிலிண்டா்களை இரவில் கழற்றி வைப்பது நல்லது.
கோடை காலங்களில் மேற்குத் தொடா்ச்சி மலையின் வனப்பகுதியில் மனித செயல்களால் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வனங்கள் மற்றும் வன விலங்குகள் பாதிக்கப்படுவதால் வனப்பகுதிக்குள் மனிதா்கள் செல்ல அனுமதி இல்லை என்றாா் அவா்.