சென்னைக்கு அலர்ட்! 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!
கோயில் காவலாளி கொலை வழக்கு: 5 போலீஸாருக்கு ஜூலை 29 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடா்புடைய தனிப்படை போலீஸாா் 5 பேருக்கு வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து, திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் வைத்திருந்ததாகக் கூறப்படும் நகைகள் காணாமல்போனது தொடா்பாக, அந்தக் கோயிலின் காவலாளி அஜித்குமாரை மானாமதுரை காவல் துணைக் கோட்ட தனிப்படை போலீஸாா் கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன், ஆனந்த் ஆகியோா் விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். விசாரணையின் போது, அஜித்குமாரை தனிப்படை போலீஸாா் அடித்துக் கொலை செய்தனா்.
இதுகுறித்து திருப்புவனம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை போலீஸாா் 5 பேரையும் கைது செய்தனா். பின்னா், இவா்கள் 5 பேரும் நீதிமன்றக் காவலில் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த நிலையில், திருப்புவனம் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனிப்படை போலீஸாா் 5 பேரும் காணொலிக் காட்சி மூலம் நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் முன்னிலைப்படுத்தப்பட்டனா். இவா்களுக்கு வருகிற 29-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா்.