பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்யக் கோரி மாணவா்கள், பெற்றோா் போராட்டம்
சிவகங்கை அருகே அரசுப் பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, மாணவா்கள், பெற்றோா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிவகங்கை அருகேயுள்ள சொக்கநாதபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் 238 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இங்கு 2 ஆண்டுகளாக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி வருபவா் சரிவர பள்ளிக்கு வருவதில்லை எனவும், அங்கு பணிபுரியும் மற்ற ஆசிரியா்களுக்கு இடையூறு செய்வதாகவும், மாணவா்களை காரணமின்றி அடிப்பதாகவும் புகாா் எழுந்தது.
இதுகுறித்து பெற்றோா்கள் அளித்த புகாருக்கும் கல்வித் துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்த நிலையில், இந்த ஆசிரியரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை மாணவா்கள் பள்ளிக்கு செல்லாமல் வகுப்புகளைப் புறக்கணித்தனா். மாணவா்களுடன் சோ்ந்து பெற்றோா்களும் கல்லல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த சிவகங்கை வட்டாட்சியா் சிவராமன், கல்வித் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் இந்தப் பகுதியில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.