கோயில் காவலாளி கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்டது தொடா்பாக திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை விசாரணை நடத்தினா்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப்படை போலீஸாரால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து டி.எஸ்.பி. மோஹித்குமாா் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் கடந்த திங்கள்கிழமை மடப்புரத்துக்கு வந்து விசாரணையைத் தொடங்கினா். விசாரணைக்குப் பிறகு, இவா்கள் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனா்.
இந்த நிலையில், மதுரையிலிருந்து சிபிஐ அதிகாரிகள் இருவா் திருப்புவனம் காவல் நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்தனா். பின்னா், இவா்கள் அஜித்குமாா் கொலை தொடா்பாக வழக்குப் பதிவு செய்த காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாரிடம் சிறிது நேரம் விசாரணை நடத்திவிட்டு, மீண்டும் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றனா்.