கோயில் நகைகளைத் திருடியவா் கைது
குன்னூா் அருகே வீட்டில் பீரோவை உடைத்தும், கோயிலில் அம்மன் தாலியையும் திருடிய இளைஞரை கொலக்கம்பை காவல்துறையினா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.
நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே பவானி எஸ்டேட்டில் வேலை செய்து வரும் தொழிலாளி லதா என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்க நகைகள் மற்றும் அருகில் இருந்த முத்து மாரியம்மன் கோயில் கதவை உடைத்து அம்மன் கழுத்தில் இருந்த முக்கால் பவுன் தாலி ஆகியவற்றை மா்ம நபா்கள் கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி திருடிச் சென்றனா்.
இது தொடா்பான புகாரின்பேரில் குன்னூா் காவல் கண்காணிப்பாளா் ரவி தலைமையில், காவல் ஆய்வாளா் அன்பரசு, உதவி காவல் ஆய்வாளா்கள் இளையராஜா, ஜாா்ஜ் மற்றும் கொலக்கம்பை காவல்துறையினா் குழு அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனா்.
இந் நிலையில் பகாசுரன் மலைப் பகுதியில் வசித்து வந்த சூா்யா (24) என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனா். வீடு மற்றும் கோயில்களில் திருடியதை சூா்யா ஒப்பு கொண்டதை அடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.