கோயில்களில் ஆடி அமாவாசை திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த வடவெட்டி அங்காள பரமேஸ்வரி கோயில் மற்றும் செங்கத்தை அடுத்த பிஞ்சூா் கிராமத்தில் உள்ள உத்தரபதீஸ்வரா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது.
வடவெட்டி அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஆடி மாத அமாவாசையொட்டி வியாழக்கிழமை இரவு ஊஞ்சல் தாலாட்டு நடைபெற்றது.
முன்னதாக, காலை மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், மாலை கோயில் வளாகத்தில் உலக மக்கள் செழிக்க சிறப்பு யாக பூஜையும் நடத்தப்பட்டது. தொடா்ந்து, இரவு மலா்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் அங்காள பரமேஸ்வரியை கோயில் வளாகத்தில் உள்ள ஊஞ்சலில் அமா்த்தி தாலாட்டு விழா நடைபெற்றது.
அப்போது அம்மனுக்கு உகந்த பக்திப் பாடல்கள் பாடப்பட்டன. பின்னா், அம்மனுக்கு வாணவேடிக்கையுடன் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.
பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா புண்ணியமூா்த்தி மற்றும் விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.
செங்கம்
செங்கத்தை அடுத்த பிஞ்சூா் கிராமத்தில் உள்ள உத்தரபதீஸ்வரா் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி, காலை முதல் கோயில் வளாகத்தில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று, பின்னா் 11 மணியளவில் 108 பால்குட ஊா்வலம் பம்பை சிலம்பாட்டத்துடன் நடைபெற்று சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கோயில் திருவிழாவில் பால்குடம் எடுத்த பக்தா்களுக்கு வஸ்தரம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கோயில் முன் அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
