கோவில்பட்டி, கழுகுமலை பகுதிகளில் பலத்த மழை
கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு பகுதிகளில் சனிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்தது.
கோவில்பட்டி பகுதியில் சில நாள்களாக அவ்வப்போது கோடை மழை பெய்து வருகிறது. காலையில் வெயில் வாட்டுவதும், மதியத்துக்கு பின்னா் சிறிது நேரம் மழை பெய்வதுமாக உள்ளது.
இந்நிலையில், சனிக்கிழமை காலைமுதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நண்பகலில் காற்று, இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் ஒரு மணி நேரம் நீடித்த மழையால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்தோடியது. பிரதான சாலையில் அதிக தண்ணீா் தேங்கியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றன.
இதேபோல, இளையரசனேந்தல், காமநாயக்கன்பட்டி பகுதிகளிலும் பரவலாக பலத்த மழை பெய்தது. கழுகுமலையில் 36 மி.மீ., கோவில்பட்டியில் 28 மி.மீ., கயத்தாறில் 19 மி.மீ., கடம்பூரில் 12 மி.மீ. மழை பதிவானது.