கோவில்பட்டியில் பைக் திருட்டு: தொழிலாளி கைது
கோவில்பட்டியில் பைக் திருட்டில் ஈடுபட்ட தொழிலாளியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி புதுகிராமம் கோபாலபுரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் மகன் ஆனந்த் (28). ஜேசிபி மெக்கானிக்காக வேலை செய்து வருகிறாா். இவா், தனது பைக்கை செப். 22ஆம் தேதி இரவு வீட்டின்முன் நிறுத்திவிட்டு சென்றாா். 23ஆம் தேதி காலை பாா்த்த போது பைக்கை காணவில்லையாம்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து, அவா் அளித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வந்தனா்.
இந்நிலையில், பைக்கை திருடிய வெல்டிங் தொழிலாளியான மதுரை காளவாசல் சம்மட்டிபுரம் முனியசாமி காம்பவுண்ட் பகுதியைச் சோ்ந்த முத்துக்கருப்பன் மகன் காா்த்திகேயன் (எ) காந்தியை (35) போலீஸாா் கைது செய்து, பைக்கை பறிமுதல் செய்தனா்.